சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுப்பியதாக இன்று இ-மெயில் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த இ-மெயில் போலியானதாக இருக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும், அரியர்ஸ் விவகாரம் தொடர்பாக வெளி யான ஏஐசிடிஇ கடிதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேக​ம் உள்ளது  என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகஅரசு அறிவித்துள்ள பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சிமுடிவுக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் அதிகாரபோதைக்கும்,  கல்லூரி நாட்களில் சில பல விரிவுரையாளர்களின்  வெறுப்புக்கு ஆளாகும் மாணவர்கள் திட்ட மிட்டு பழிவாங்கப்படுவதாகவும் புகார்கள் ஏற்கனவே உள்ளன.

இதன் காரணமாக அரியர் உள்ள மாணவர்கள் பல முறை மீண்டும் மீண்டும் தேர்வை எதிர் கொண்டும், அவர்கள்  தேர்ச்சி பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற முறை கேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலரும் ஈடுபட்டு வந்ததும்,  முறைகேடு செய்த விவகாரமும் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட வர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்த விவரமும்  வெளியாகவில்லை.

ஆனால், பல்வேறு கல்லூரி நிர்வாகத்தினரால், பாதிக்கப்படும் அரியர் மாணவர்கள், கடுமையான மன உளைச்சலில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசின் தேர்ச்சி முடிவு குறித்த அறிவிப்பை  பெரிதும் வரவேற்றனர். தங்களது வாழ்க்கையில் ஒளியேற்றியதாக,  அதிமுக அரசையும், முதல் வரையும் புகழ்ந்து கட்அவுட் வைத்து, மாணவர்கள் வாழ்த்தி வருகின்றனர். சமூக வலை தளங்களிலும் முதல்வர்எடப்பாடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்க மறுத்து இருப்பதாகவும், இதற்கான மின்னஞ்சல் தனக்கு வந்து இருப்பதாகவும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்து பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

ஆனால், ஏஐசிடிஇ தமிழக அரசுக்கோ, உயர்கல்வித்துறைக்கோ அதுபோன்று எந்தவொரு கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பவில்லை  அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மறுப்பு தெரிவித்தார். மேலும், அரியர் தேர்வு தொடர்பாக எந்த எதிர்ப்பும் ஏஐசிடிஇ தெரிவிக்கவில்லை என்றும்,   அண்ணா பல்கலை துணை வேந்தர் தனது கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக கூறி வருகிறார். பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களை ஆல் பாஸ் செய்தற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு என்று வெளியான தகவல் தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில்தான் இன்று ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வுக்கு எழுதிய மின்னஞ்சலின் நகல் என்று, ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை பத்திரிகை டாட் காம் உள்பட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டது. இது மாணவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார்,  அரியர்ஸ் விவகாரம் தொடர்பாக வெளியான ஏஐசிடிஇ கடிதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேக​ம் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடிவு, இதில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறியவர், அரியர்ஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

அதுபோல, AICTE அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான E – Mail போலியானது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில்  இருந்து எந்த E-mail-ம் வெளியிடப்படவில்லை என துணை வேந்தர் சூர்ப்பா கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் அரசியல் செய்வதாக கல்வி வல்லுனர்கள்  குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே  சூரப்பாவுக்கும், தமிழக அரசுக்கும் இடையே சரியான புரிதல் இல்லாத நிலை யில், மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில், இரு தரப்பினரும் மாற்றி மாற்றி குறைகூறி வருவது மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின்  பெற்றோர்களிடையேயும்  கடுமையான மனஉ ளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில்  உண்மை நிலவரம் என்ன என்பதை ஏஐசிடிஇ வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே, உண்மை நிலை தெரியவரும்  என கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.

மாணவர்களை குழப்பும் அரியர் தேர்ச்சி விவகாரம் குறித்து, விரைவில் மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அரியர்ஸ் விவகாரத்துக்க சீக்கிரம் முற்றுப்புள்ளி வைங்கப்பா என்று சமூக வலைதளங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.