மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன்,  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது, போடப்பட்டது பொய் வழக்கு என்று நீதிமற்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்து உள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் வணிகர்களான தந்தை மகன் காவல் துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், சிறையில் உள்ள காவல் ஆய்வாளர்,  ஸ்ரீதர், ஜாமின் வழங்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையின்போது, சிபிஐ பதில் தெரிவித்த நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் ஜாமின்  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான் குளம் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சிபிஐ தெரிவித்ததுடன் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும்,  தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யும்படி சாத்தான்குளம் போலீசாரை தூண்டியது யார் என்று விசாரணை நடைபெறுவதால், கைது செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கு  ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கூறினர்.

இதையடுத்து, ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.