சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், 3 நாட்கள் போதாது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திமுக எம்எல்ஏவுமான துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாக இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுகுழு கூட்டம் நடைபெற்றது. இதில், சபாநாயகர் தனபால், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் உள்பட அலுவல் ஆய்வுகுழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த குழு கூட்டத்தில் எதிர்க்கட்சியினரின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், 3 நாட்கள் மட்டுமே சபை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி  சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், கூட்டத்தொடரை 7 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம்.  ஆனால், அவர்கள் 3 நாட்கள் நடத்ததான் முடிவு செய்துள்ளார்கள்.

தமிழக சட்டப்பேரவையை குறைந்தது 7 நாட்களாவது நடத்த வேண்டும் என்றும்,  3 நாட்கள் கூட்டத்தில், கொரோனா உள்பட எந்தவொரு பிரச்சினை குறித்து பேச முடியாது என்று கூறினார்.

மேலும், மாநில அரசை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது  என்றும், இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, கொரோனா வைரஸ் பரவலை  காரணம் காட்டி, சட்டமன்ற கூட்டத்தை உடனே முடிக்க  திமுக தலைவர் உள்பட எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு சபையில் வலியுறுத்தி கூட்டத்தை முன்கூட்டியே முடித்த நிலையில், தற்போதும் கொரோனா பரவல் தொடரும் நிலையில்,  அதே காரணத்துக்காக 7 நாட்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருப்பது,  விமர்சனங்களை  எதிர்கொண்டுள்ளது.