சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட விவாகரத்தில், எடப்பாடி தரப்பிடம் நீதிமன்றம்  அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதையடுத்து,  இபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஜூலை 11ந்தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒபிஎஸ் முன்னிலையில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு, தலைமை அலுவலகத்தில் உள்ள  ஆவணங்களை அள்ளிச்சென்றனர். இதையடுத்து எடப்பாடி, ஒபிஎஸ் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் காவல்துறை வந்து தடியடி நடத்தியதுடன், ஓபிஎஸ் அனைத்து பொருட்களையும் எடுத்துச்சென்ற பிறகு அலுவலகத்துக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நிலையில், எடப்படி தரப்பிடம் அலுவலக சாவியை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.

இதுதொடர்பாக  சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவிடக் கூடாது என்று கூறி இபிஎஸ் தரப்பு கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிய நிலையில் வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.