சென்னை,

ரும் 8ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தை அமைச்சர்கள் உள்பட  7 பேர்  புறக்கணித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்  கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபையில் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், அதிமுகவை எதிர்த்து, ஆர்.கே.நகர் தொகுதியில்  சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன்  பங்கேற்க உள்ளார். மேலும், திமுக சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி பணப்பட்டு வாடா, ஓகி புயல் பாதிப்பு, அரசுக்கு பெரும்பான்மை போன்ற  பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் அதிமுகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள டிடிவி தினகரன் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், அதையொட்டி ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறி தனது அணிக்கு இழுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற இக்கட்டமான சூழ்நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்   தலைமை அலுவலகத்தில் நடந்தது.  இதில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  ஆகியோர் தலைமை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது சட்டசபையில்  எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, சட்டசபைக்கு வரும் தினகரனை எதிர்கொள்வது குறிதது ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி பல உத்தரவுகைள போட்டதாகவும், கட்சியின் கொறடா உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்றும் எக்காரம் கொண்டு கொறடா உத்தரவை  மீறக்கூடாது என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், டிடிவி தினகரன் அரசை விமர்சித்து பேசுவார், அப்போது யாரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது,  மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ்,  திமுக எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தினகரன் எழுப்பும் பிரச்னைகளுக்கு முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் தொய்வு இல்லாமல் அமையும் வகையில் எம்எல்ஏக்கள் செயல்பாடு இருக்க வேண்டும். கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது என்று பேசியதாகவும் கூறப்படுகிறது.

இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், 100 எம்எல்ஏக்கள் மட்டுமே  கலந்து கொண்டதாகவும், . அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாஸ்கரன், செல்லூர் ராஜூ உள்பட  ஆறுக்குட்டி, சிவசுப்ரமணியம், பிரபு, பவுன் ராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மேலும், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வமும் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

டிடிவி கூறியதுபோல இன்றைய கூட்டத்தை புறக்கணித்தவர்கள் சிலிப்பர் செல்களா என்று அதிமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் பேசி வருகின்றனர்.