பிணை கைதிகளாக அதிமுக எம்எல்ஏக்கள்: கவர்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

Must read

சென்னை,

பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் மன நிலையை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார், இதன் காரணமாக ஓபிஎஸ் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக அதிடியாக களத்தில் குதித்தார். ராஜினாமாவை வாபஸ் வாங்கப்பபோவதாகவும், சட்டமன்றத்தில் எனக்கான ஆதரவை நிரூபிப்பேன் என்றும் கூறி உள்ளார்.

இதன் கதாரணமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், சசிகலா தரப்பினர் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைத்துள்ளனர்.

இன்று மாலை கவர்னர் வித்யாசாகர்ராவ் சென்னை வர இருக்கிறார். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.

இந்நிலையில்  திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், பிணை கைதிகளாக இருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் மன விருப்பத்தை ஆராய்ந்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதமாவது,

தமிழகத்தின் அரசியல் சூழல் நிலையற்றத் தன்மையுடனும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் உள்ள நிலையில், பொறுப்பு ஆளுநரின் வருகையும் அவர் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி யிருக்கின்றன.

காபந்து முதலமைச்சராக நீடிக்கும் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என தனது கட்சித்தலைமையின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் அவர் ராஜினாமா ஆளுநர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களை சொகுசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி ‘பிணைக் கைதி’கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது.

ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திருவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகநாதன் அவர்கள் பின்னர் காபந்து முதலமைச்சரை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அப்படியானால், உண்மையாகவே இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது.

இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்கள் மாநிலத்தில் நிலையான-சுதந்திரமான-சட்டப்பூர்வ மான வழியிலான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார்.

மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டத்திற்குப் புறம்பான நிர்பந்தங்களாலும் மிரட்டல்களாலும் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு செல்கிறார்களா, இதற்கான பலன்கள்-வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

ஆகவே ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம் மற்றும் எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் உரிய முடிவுகளை எடுத்து சுதந்திமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளை காத்திடுமாறு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article