சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து  உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் உள்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுவில்,  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தனி நீதிபதி வேல்முருகன், உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் அனுமதியளித்து கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து,  எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது நீதிபதிகள் எம்.துரைசாமி,  சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அதிமுக தரப்பில்,  மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி, சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களே இல்லை என்றும், ராம்குமார் ஆதித்தனின் உறுப்பினர் அட்டை கடந்த ஜூலை 2019ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதால் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து தனி நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணைக்காக அக்டோபர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை விசாரிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களது மனுவில்,  அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.