சிசிடிவி காமிரா அகற்ற கூறியது அதிமுக அரசுதான், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமானது! உச்சநீதி மன்றத்தில் அப்போலோ நிர்வாகம் தகவல்…

Must read

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு  ஆஜராக முடியாது, அது ஒருதலைப்பட்சமானது  என்றும், அப்போதைய அதிமுக அரசு கூறியதால்தான், ஜெயலலிதா சிகிச்சை பெறும் பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்கள் அகற்றப்பட்டன என்று  அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா, அப்போலோவில் 75நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவர் இறந்ததாக கூறப்பட்டது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பது குறித்து அப்போலோ நிர்வாகமோ, அப்போதைய அதிமுக அரசோ மக்களும் ஏதும் தெரிவிக்காத நிலையில், அவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழகஅரசு, ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி வந்தது. இதன் விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆஜராக மறுத்ததுடன், உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெற்றது.

இந்த வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோ நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக  நடந்துகொள்கிறது என்று குற்றம் சாட்டியதுடன்,  இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் உள்பட  ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எங்களது மருத்துவர்களையே மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றனர்.

விசாரணை விவரங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்குக் கசியவிடப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஊடகங்களில் தொடர்ந்து தவறான ஊடக செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிக்சை தரம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்த கருத்துக்களை போதுமானவை. ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையால் அப்போலோ மருத்துவமனை நற்பெயர் கலங்கப்படுத்தப்படுகிறது.

அதிகார வரம்பை மீறி ஆறுமுகசாமி ஆணையம் நடந்துகொள்கிறது. நிறைய உத்தரவுகளை போடுகிறார்கள்.  இதனால் எங்கள் மருத்துவமனை மீதான நற்பெயர் கெட்டுப்போகிறது.

இதனால், எங்களுக்கு ஏற்படும் இழுக்கை தடுக்கும் நோக்கத்தில்  நீதிமன்றத்தை நாடக்கூடிய உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஆணையம் முன்பு ஆஜராக முடியாது என தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆறுமுகசாமி ஆணையம் என்பது  உண்மையை கண்டறிய நடக்கும் ஆணையமாக தெரியவில்லை. நாங்கள் ஆணையத்தை கலைக்க கோரவில்லை. ஆனால் ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை.

மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அப்படி இருக்க மருத்துவ ரீதியிலான விவரங்களை நாங்கள் எந்த அடிப்படையில் தெரிவிப்பது நீதிமன்றத்தில் என்ன விஷயங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கிறோம். ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஆணையத்தின் முன்பாக மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அப்போதைய  அப்போதைய அரசு கூறியதாலேயே, அவர் சிகிச்சை பெறும் பகுதியில் உள்ள  சிசிடிவி கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிரைவேசி தேவைப்பட்டதாக கூறி சிசிடிவி கேமராக்கள் அகற்றபட்டன” எனவும் அப்போலோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

More articles

Latest article