சென்னை: பெரும் பரபரப்புக்கு இடையில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சுமார் 1மணி நேரத்திற்குள் நிறைவடைந்தது.  பொதுக்குழு  மேடையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கிரிடம், வாள் பரிசளிக்கப்பட்டது.

ஒற்றை தலைமை, நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இன்று காலை 11.45 மணி அளவில் அதிமுக பொதுக்குழு கூடியது. அதிமுகவின் இரட்டை தலைவர்களாக உள்ள ஒபிஎஸ், இபிஎஸ் பொதுக்குழு வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பொதுக்குழு கூடியதும், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது . அதைத்தொடர்ந்து அவைத்தலைவராக தற்காலிக அவைத்தலைவராக இருந்து வரும் தமிழ்மகேஷ் உசேன் நிரந்தர அவைத்தலைவராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. .

திமுக அரசை எதிர்த்து இரட்டை தலைமையால் கடுமையாக செயல்பட முடியவில்லை. அதிமுகவில் இரட்டை தலைமையை ரத்து செய்து விட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வலிமையான ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும். அடுத்த பொதுக்குழுக்கான தேதியை இன்றே இறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, அதிமுக பொதுக்குழு ஜூலை 11ந்தேதி மீண்டும் என அவைத்தலைவர் அறிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு மீண்டும் அடுத்த மாதம் கூறும் என அறிவித்தார். அதனால், ஏற்கனவே தீர்மானித்தபடி 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், கோபமடைந்த ஓபிஎஸ் மேடையில் இருந்து எழுந்தார். அப்போது அவர்மீது தண்ணீர் பாட்டில்வீசப்பட்டது. இதனால், அவர் கோபத்துடன் மேடையில் இருந்து இறங்கி வெளியேறினார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இபிஎஸ்-க்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்டபடி வெளியேறினர்.

அதிமுக பொதுக்குழுவில்  எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி,  அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையாக ஈபிஎஸ் சை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என கூறினார்.

ஜூலை 11ல் நடைபெற உள்ள பொதுக்குழுவில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்தார்.

முன்னதாக மேடைக்கு வந்த இபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் வீரவாள், மலர் கிரிடம், மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.