சென்னை,

திமுக ஆட்சி மன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான  கே.பி.முனுசாமி பேசும்போது சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி சமதானம் செய்தார்.

இரு அணிகளுக்கு இடையே நேரடியாக மோதல் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடைந்த அதிமுக மீண்டும் இணைந்ததை தொடர்ந்து ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதைத்தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளுக்கு இடையே மல்லுகட்டு ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, இந்த தொகுதியில், ஓபிஎஸ் சார்பாக போட்டியிட்ட மதுசூதனனே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இபிஎஸ் தரப்போ வேறு வேட்பாளரை நிறுத்தம் என மறுப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஓபிஎஸ் அணி மைத்ரேயனும், அணிகள் இணைந்துள்ளது மனங்கள் இணைய வில்லை என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற அதிமுக நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் அணி புறக்கணிக்கப்பட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று ஒருங்கிணைந்த  அதிமுக ஆட்சிமன்ற குழு  கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  கூடியது.

இந்த கூட்டத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அதிமுகவில்  காலியாக உள்ள நிர்வாகிகள் இடங்களை நிரப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கே.பி.முனுசாமி சில கருத்துக்களை பேசினார். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து,  முதல்வர் பழனிசாமி குறுக்கிட்டு,  பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கூறி சமாதானம் செய்தார்.

அதைத்தொடர்ந்து, வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் ஆட்சிமன்ற குழுவுக்கு வழங்கப்படு வதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்றும், நாளையும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் , அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும்,

நாளை மறுநாள் (29-ந்தேதி) விருப்ப மனுக்களை ஆட்சி மன்றக்குழு பரிசீலனை செய்து, வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கும் என்று  கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் கூறினார்.

இரு அணியினரிடையே இன்று நடைபெற்ற மல்லுக்கட்டு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரு அணிகளும் ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்று  மல்லுகட்டுவதன் காரணமாக அதிமுக மீண்டும் உடையும் நிலை ஏற்படலாம் என சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.