சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதற்கான சட்டதிருத்தத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதால், அவைத்தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் என்றும் கூறினார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்த நிலையில், நேற்று பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழுவில் சர்ச்சைகளுக்கு இடையே நேற்று தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகபும், மீண்டும் ஜூலை 11ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அவைத்தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன்  தெரிவித்தார். இதையடுத்து பொதுக்குழு நிறைவடைந்தது.

இதற்கிடையில்,  மீண்டும் அதிமுக பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி வீட்டில் இன்று காலை முதலே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர், வைத்திலிங்கம் எழுப்பியுள்ள 5 கேள்விகளுக்கு பதில் அளிக்கிறோம்.

ஆண்டுக்கு ஒருமுறை அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதி என்று குறிப்பிட்டார். ”அதிமுகவின் சட்டவிதி 19(7)ன் படி பொதுக்குழுவை கூட்ட அறிவித்தோம்.பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்பமிட்டு கொடுத்தால்,அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பொதுக்குழுவை கட்டாயம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மாறாக, கழக விதிகளில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதி பெற்று பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஆகவே,அவர் சொல்லி இருக்க கருத்து முழுக்க முழுக்க தவறு.

மேலும், நேற்று வரை கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், தற்போது பொருளாளராகவும் உள்ள ஓபிஎஸ் அவர்களும், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போது கழகத்தின் தலைமைநிலை செயலாளரகவும் உள்ள ஈபிஎஸ் இருவரும் முறைப்படி கையொப்பமிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

இவ்வாறு இருக்க,ஓபிஎஸ் அவர்கள் கையொப்பமிட்ட இந்த கடிதத்தை கழகத்தின் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இல்லை போலி என்கிறாரா?”,என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவின் அனைத்து கட்சி தேர்தல் முடிவுகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றவர், அதிமுகவில் அனைத்து பதவிகளும் 5ஆண்டு காலம் தான். ஆனால், நேற்றைய பொதுக்குழுவில் விதிகள் திருத்தப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளது.  இதனால்,  ஓபிஎஸ்-சின் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ்-சின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதாவது,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்த பதவிகள் காலாவாதியாகின. காலாவதியானதால் ஓபிஎஸ் பொருளாளர், ஈபிஎஸ் தலைமை நிலைய செயலாளராக தொடருவார்  என்றும், இந்த விதியானது  2017-ஆம் ஆண்டு ஓபிஎஸ்க்காக அதிமுக சட்ட விதியில் திருத்தம் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதால், அவைத்தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் என்று கூறியவர், அவர்தான் ஜூலை 11ந்தேதி பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவித்துள்ளார் என்றார்.

நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றது என்று விளக்கம் அளித்தவர்,   பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்ப மிட்டு கொடுத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்படும். கட்சி சட்ட திட்டங்களை இயற்றவும் திருத்தும் செய்யவும் அதிகாரம் கொண்டது அதிமுக பொதுக்குழு. அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விதிகள் ஏதும் இல்லை.

மேலும், அதிமுகவின் சட்ட விதிகள், பதிவிகள் மாற்றத்திற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேவையில்லை, மாறாக, இது குறித்து தெரிவித்தால் போதும். எனினும், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் தேர்தல் ஆணையம்தான் தலையிட முடியும் என்றும், உயர்நீதிமன்றம் விதித்த விதிகளின்படி நேற்றைய பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்பட்டது, இதில் சட்ட விதிமீறல் இல்லை எனவும் சிவிசண்முகம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  ”அம்மா இருந்தபோது அவர் என்ன சொன்னாலும் அது எங்களுக்கு சட்டம். அந்த வகையில், தலைமைக் கழகத்தின் பொதுக்குழு கூடி அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கழகத்தின் விதி. இதில் பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பளர்கள் கூடி அவைத்தலைவரை தேர்ந்தேடுக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. ஆகவே வைத்திலிங்கம் அவர்கள் கூறியது தவறு.

கழகத்தின் விதிகளை மாற்றவோ, நீக்கவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அதுமட்டுமல்லாமல், 23 தீர்மானக்ளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  அதிமுகவில் நடப்பதைக் கண்டு திமுகவினர் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்போது என்ன நடக்கிறது என்று நாங்களும் பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.