சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே  செஸ் போட்டிகள் நடத்த தமிழகஅரச ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், ஜூலை 28, 2022 தொடங்கி, ஆகஸ்ட் 10, 2022 வரை தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி  இந்தியாவில் முதன்முறையாகவும், ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதுதான் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள இதுவரை 189 நாடுகள் பதிவு செய்துள்ளன. இதன்மூலம்செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலேயே அதிக வீரர்கள் பங்கேற்கும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களிடையே செஸ் விளையாட்டு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், செஸ் போட்டிகள் நடத்தவும், வட்டம், மாவட்டம், மாநில அளவில் போட்டி நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கவும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. மேலும் பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்,  சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழகஅரசு தெரிவித்துள்ளது.