சென்னை: அதிமுக 50வது ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து, 10ஆம் தேதி நடைபெறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், சசிகலா ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா வருகை தர இருப்பதாக கூறியுள்ள தும் அதிமுகவில்  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக பொன்விழா வரும் 16ந்தேதி நடைபெற உள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும்  உள்ளாட்சி தேர்தல் மற்றும் சசிகலா வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து வரும் 10ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் நடைபெற்று வந்த தீய சக்தியின் ஆட்சியை அகற்றி, தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், உழைப்பால் உயர்ந்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக் கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவரும், மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து மறைந்தும், மறையாதவராக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் மக்கள் திலகம்  ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’” 49 ஆண்டுகளைக் கடந்து, 17.10.2021 – ஞாயிற்றுக் கிழமை அன்று “பொன் விழா” காண இருக்கும் இத்திருநாளை, கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கழகத்தின் “பொன் விழா” ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டக் கழகங்களின் சார்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருவுருவச்சிலை களுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில், நடைபெற உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த அதிமுக,  இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்து ஆட்சியை பறிகொடுத்தது. இருந்தாலும்  60 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகவும் அதிமுக செயல்பட்டு வருகிறது.

அதிமுக தோல்விக்கு  வலுவான தலைமை இல்லாததாலும், இரட்டை தலைமை மற்றும் தலைமைகளிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாகவே  படுதோல்வியை சந்தித்ததாக விமர்சிக்கப்பட்டது. சசிகலாவும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

அதிமுக பொன்விழா ஆண்டில் வரும் 16ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர்  ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்முறையாக சசிகலா வர உள்ளதாகவும், அவர் அப்போது தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்தான்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 10ந்தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.