சென்னை: 
விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில்  இடம்பெற்றிருக்கும் என்று  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விவசாய அமைப்புகளுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் சேப்பாக்கம் வேளாண்துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,   திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி 14 ம் தேதி, வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கை விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில்  இடம்பெற்றிருக்கும் என்றும்  விவசாயிகள் தன்னிறைவு அடைய, தலை நிமிர உதவும் நிதிநிலை அறிக்கையாக இது இருக்கும் என்றும் அவர் கூறினார்.  இதுமட்டுமின்றி கரும்பு அறுவடையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.