கோவை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர்கள் பணிக்கு,  ஒப்பந்த முறையில் 977 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார்கள் என்றும், அவர்கள் விரைவில் நியமனம்  செய்யப்படுவார்கள் என  அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் அதிமுக ஆட்சியின்போது  ஒப்பந்த செவிலியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான செவிலியர்கள்  பின்னர் திமுக ஆட்சி பதவி ஏற்றதும் பணி நீக்கம்  செய்யப்பட்டனர். இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு பணி வழங்க முடியாது என தெரிவித்து வந்த திமுக அரசு, தற்போது தேர்தலை கருத்தில்கொண்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, 977 செவிலியர்களுக்கு, பணி நியமனம் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்குள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளை வழங்கினார். அவருடன் அந்த தொகுதி அமைச்சரான  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து,  பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை பிரிவை இணைக்கும் வகையில், இணைப்பு சாய் தளத்துடன் கூடிய கட்டிடம் மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் ஆகியை திறந்து வைக்கப்பட்டது.

பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியன் , “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள் 37 ஆயிரத்து 173 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் பணி விடுப்பு செய்யப்பட்டனர். ஆனால், அந்த ஒப்பந்த செவிலியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அந்த ஒப்பந்த செவிலியர்கள் 977 பேருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் விழாவில் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்” என்றார்.

மேலும், மதுரையில் பரவும் எலி காய்ச்சல் தொடர்பாக பொது சுகாதாரத் துறைத் சார்பில் அதிகாரிகளை அனுப்பி உசிலம்பட்டி கிராமத்தில் எங்கிருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது? சுகாதார சேவைகள் எப்படி இருக்கிறது? உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைத்து ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அந்த பகுதியில் நீர் மாசுபாடு உள்ளதா? என்பதை ஆய்வகங்கள் மூலம் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி உள்ளதாகவும், தற்போது எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், இருப்பினும் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்  கூறினார்.