சென்னை: மக்களை திசைதிருப்பவே, மத்தியஅரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில் திமுக அரசு பொய் சொல்கிறது,  பொய் சொல்பவர்கள் அவரிடம் ஆலோசனை கேளுங்கள்  என்றும், தமிழக அரசு வழங்க வேண்டிய GST Refund தொகையை, நிதிப் பற்றாக்குறை என்று காரணம் கூறி, திமுக அரசு நிலுவையில் வைத்துள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு உரிய வரி பகிர்வு வழங்கப்பட வில்லை என திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டம் நடத்தினர். அதுபோல சென்னை உள்பட பல பகுதிகளில் மக்களுக்கு அல்வா பாக்கெட் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், மத்திய நிதியமைச்சர், தமிழ்நாடு அரசுக்கு பாஜக ஆட்சி காலத்தில் கொடுத்த வரிபகிர்வு எவ்வளவு , காங்கிரஸ் ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட வரி பகிர்வு எவ்வளவு என்பதை பட்டியலிட்டார்.  இதற்கு பதில் கூற முடியாமல் திமுக அரசு தவித்து வருகிறது.

இந்த நிலையில்,  திமுகவின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு புள்ளி விவரத்தோடு பதில் அளித்துள்ளார் தமழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், அதில்,  அன்றும் இன்றும் நிதி பங்கீடு என திமுக – காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதி மற்றும் தற்போது பாஜக ஆட்சியில் வழங்கப்பட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி திமுக – காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரி பகிர்வு, 32% என்றும் 2004 – 2014 காலகட்டத்தில், வழங்கிய வரிப் பங்கீடு ரூ. 94,977 கோடி மட்டுமே என்றும் 2004 – 2014 இல் தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை ரூ.57,924.42 கோடி மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ள நிதி குறித்து குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, மாநிலங்களுக்கு உயர்த்தப்பட்ட வரி பகிர்வு, 42% என்றும் 2014 – 2024, பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கிய வரி பங்கீடு ரூ.2,77,444 கோடி என்றும் 192% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2014 – 2023 ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை, 2,30,893 கோடி என்றும் 300% அதிகமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளதுடன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6.412.15 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடன் உதவியாக நமது மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் கடந்த 9 ஆண்டுகளில், தமிழகத்திற்கான திட்டங்கள், உதவித் தொகை மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூ.10.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பான 5.16 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பதை திசைதிருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில், மீண்டும் ஒரு முறை பொய் கூறியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்வதில் மட்டுமே கவனமாக இருந்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே மாநில உரிமைகள் பற்றி பேசும் திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் நிதித் துறையில் அனுபவம் பெற்ற, ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி சம்பாதித்ததை எளிதாகக் கண்டறிந்த, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் போன்றவர்களிடம் பொய் சொல்பவர்கள் ஆலோசனை கேட்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

2014-24 கால கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு ரூ.2,77,444 கோடி! வெள்ளை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் தகவல்…