சென்னை: அதிமுகவில் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான், இனிமேல் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என எடப்பாடியின் ஆசையை நிராசையாக்கிய ஓபிஎஸ், சசிகலாவை தற்காலிகமாகத்தான் பொதுச்செயலாளராக்கினோம் என காட்டமாக தெரிவித்து உள்ளார். தற்போது ஓபிஎஸ் எடப்பாடி இடையே நடைபெற்று வரும் ஒற்றை தலைமை யுத்தம் காரணமாக, அதிமுக மீண்டும் உடைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவாதங்கள் முற்றியுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு செக் வைக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எடப்பாடியின் ஆதரவாளர்கள் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் எடப்பாடி பழனிச்சாமி வகுத்த திட்டம்தான் இது என்றும், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அன்றைய தின கூட்டத்தில் இருந்து, ஓபிஎஸ்  கோபமாக இடையிலேயேவெளியேறியதாக கூறப்பட்டது.

பின்னர், எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர், ஓ பன்னீர்செல்வத்தை  சமாதானம் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த இரு நாட்களாக முன்னாள் அமைச்சர்கள் பலர்  சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஓபிஎஸ்-இடம்  பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்கும்படியும், அதற்கு பதிலாக அவருக்கும், அவரது கனுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறியதாக தகவல் வெளியானது.

முன்னதாக, ஜெ.மறைவைத் தொடரந்து உடைந்த அதிமுக இணைந்ததும், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, இனிமேல் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என அதிமுகவின் பைலாவில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி தரப்பு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும், அந்த பதவி தனக்கு தரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதும், கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தான் ஓபிஎஸ் எடப்பாடி ஆதரவாளர்களிடம் கூறியதாகவும், கட்சியின்  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரையும் நிர்வாகிகள்தான் தேர்வு செய்ய முடியும். அதே சமயம் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், அதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது பொதுக்குழு எப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு.. பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியும்.

அதற்கு பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றினாலும் கடைசியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அதில் கையெழுத்து போட வேண்டும். நான்தான் கடைசியில் ஒருங்கிணைப்பாளராக அதில் இறுதி முடிவு  எடுக்க வேண்டும் என்றவர், அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில், மீண்டும் பொதுச்செயலாளர் பற்றி தீர்மானம் நிறைவேற்றினாலும், இதில் அதில் கையெழுத்து போட வேண்டியது நான் என்று கூறியதுடன்,  நான் என்னை நீக்கவே கையெழுத்து போடுவேன் என்று நினைக்கிறீர்களா என காட்டமாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடியின் ஒற்றை தலைமை, பொதுச்செயலாளர் கனவை ஓபிஎஸ் கலைத்து விட்டதால், இரு தரப்புக்கும் இடையே முட்டல் மோதல் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று அதிமுக பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தீரமானங்கள் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மூத்த நிர்வாகிகள் சிலர் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த கூட்டத்தில் எடப்பாடி ஆதரவாளர்களான சி.வி.சண்முகம், பா.வளர்மதி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டதாக கூறப்பட்டது. அப்போது, அங்கு ஓபிஎஸ் வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும், ஜெயக்குமார் உள்பட பலர் கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது வெளியே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள், ஜெயக்குமார் காரை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

இநத் நிலையில், நேற்று மாலை  செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுகவில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது,   மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் நடைபெற்றது என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,  ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. தேனி மாவட்ட தீர்மானமும் அப்படியானது தான். தொண்டர்கள் மனசஞ்சலம் படக்கூடாது என்பதால் தான் எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்தேன். ஜெயலலிதாவால், இரு முதல்வராக நியமிக்கப்பட்டவன். ஆனால், கடந்தமுறை பிரதமர் மோடி கூறியதால்தான், துணைமுதல்வர் பதவியை ஏற்றேன், தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன். என்பதையும் கூறினார்.

அதிமுகவில், சசிகலா இணைப்பு பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவெடுப்பார்கள். இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். பொதுக் குழு சுமூகமாக நடக்க கடவுளை வேண்டி கொள்கிறேன் என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் குறித்த கேள்விக்கு,  ஜெயலலிதா காலமாகிவிட்ட காரணத்தால், அப்போதைய சூழலில், தற்காலிக ஏற்பாட்டில் கட்சியை வழிநடத்த சசிகலாவை  பொதுச்செயலாளர் ஆக்கினோம். அவ்வளவு தான். மற்றபடி, ஜெயலலிதாவை தவிர அதிமுகவில் யாரும் பொதுச் செயலாளராக முடியாது. எனவே இரட்டை தலைமைதான் அதிமுகவில் தொடர வேண்டும். கட்சியில் உள்ள 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்பட வேண்டும் என்றார்.

எடப்பாடியுடன் கருத்து வேறுபாடா என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன். இருவரும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை. நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை என்று விளக்கம் அளித்தவர்,

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக் குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை.

எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா? அதிமுகவில் ஒற்றை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம். மீண்டும் அப்பதவியை கொண்டு வந்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

பொதுச்செயலாளர் என ஜெயலலிவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது. ஒற்றை தலைமை வேண்டும் என்கிற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிர்வாகி மூர்த்தி என்று குற்றம் சாட்டியதுடன், என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது.

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில், எதிர்க்கட்சி செய்ய வேண்டிய வேலைகளை, அதிமுக முன்னின்று செய்யாமல், உள்கட்சி குழப்பத்தால், சோர்ந்து போயுள்ளது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும்  நிலையில், பாஜக முன்னின்று எதிர்க்கட்சிக்கான பணிகளை முன்னெடுத்து வருவது அதிமுக மீதான மக்கள் செல்வாக்கு குறைவதை காட்டுகிறது.

இந்த நிலையில் மீண்டும் மக்களிடையே செல்வாக்கு பெற வேண்டுமானால், அதிமுகவுக்கு திறமையான ஒற்றை தலைமை தேவை என்று நினைத்து,  அதிமுகவை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், அதற்கு உடன்பட மறுத்து, ஒபிஎஸ், மீண்டும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்று கறாராக கூறியிருப்பது, அதிமுக மீண்டும் உடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதற்கிடையில், சசிகலாவும், தனது ஆதரவாளர்களை கூட்டி, அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் சலசலப்பு குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.