கொல்கத்தா:

சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 3 நாட்கள் நடத்திய தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடித்துக் கொண்டார்.


கொல்கத்தாவில் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களை அழைத்துவந்து மகா பேரணியை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தினார்.
இதனையடுத்து, பாஜகவுக்கும், மம்தா பானர்ஜிக்கும் நேரடியாக மோதல் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் போட்டி பேரணியை நடத்திய பாஜக, பிரதமர் மோடியை அழைத்து வந்து பேச வைத்தது.

இந்நிலையில், சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பெறவும், நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அவர்களை மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய புலனாய்வு அமைப்பை மாநில காவல் துறை நடத்திய விதத்தை மத்திய அரசு கண்டித்தது. எனினும் எதிர்கட்சிகள் இதனை பாராட்டின.

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காவல்துறை ஆணையரின் வீட்டுக்கு நேரில் சென்றார்.
மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் காரணம் காட்டி, மேற்கு வங்க அரசை முடக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சாரதா சிட்பண்ட் வழக்கில் காவல் ஆணையரை விசாரிக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு  முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும், அவரை கைது செய்யவோ, கட்டாய வாக்குமூலம் பெறவோ கூடாது என்று சிபிஐ-க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாதது ஏன் என்று விளக்கம் கேட்டும்,  காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குப் பின், 3 நாட்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முடித்துக் கொண்டார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் பேசிய அவர், இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. மத்திய பாஜக அரசின் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை எதிர்க்க தாம் ஒரு போதும் தயங்குவது இல்லை.

சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என நாங்கள் ஒரு போதும் கூறியதில்லை. டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூடி, இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளோம். அதன்பின்னர், இப்பிரச்சினையில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.