டெல்லி: இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை என்று கூறியுள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்,   நட்சத்திரங்களை ஆய்வு செய்ய டிசம்பரில் X-ray Polarimeter Satellite செயற்கைகோள் செலுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை கடந்த 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் தற்போது புவி சுற்றுவட்டப் பாதையைக் கடந்து சூரியனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.  இதைத் தொடர்ந்து, விண்ணில் உள்ள நட்சத்திரங்கள்,  வீனஸ், எக்ஸோ-கிரகங்களை இஸ்ரோ ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை, ஏனெனில் இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களைப் புரிந்துகொள்ள விண்வெளி நிறுவனம் எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள் அல்லது எக்ஸ்போசாட் டிசம்பரில் ஏவ உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சூரிய குடும்பத்துக்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகங்களை ரேடாரில் தேடும் பணியில் இஸ்ரோ களமிறங்க இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  இஸ்ரோ வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சூரிய குடும்பத்துக்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகங்களை ரேடாரில் தேடும் பணிக்காக ‘எக்சோ வேர்ல்ட்ஸ்’ என்ற செயற்கைகோளை உருவாக்கி வருகிறோம். இதுவரை சுமார் 5,000 புறக்கோள்கள் (எக்சோ பிளானெட்டுகள்) கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பூமியைப் போன்ற வளிமண்டலம் இருப்பதால் 100-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வாழக்கூடியதாக இருக்கலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் வளிமண்டலத்தைக் கடந்து செல்லும்போது மாற்றமடைகின்றன. அத்தகைய நிறமாலை பண்புகளை விண்வெளி ஆய்வு மையம் ஆய்வு செய்யும். அவை பூமியால் உருவாக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்துமா என்பதையும் கண்டறியும். மேலும், புறக்கோள்களின் வளிமண்டல குணாதிசயங்களை தெரிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வுக் கருவிகள் அகச்சிவப்பு, ஒளியியல் மற்றும் புற ஊதா நிற மாலைகளில் கதிர்வீச்சை பகுப்பாய்வு செய்யும்.

இதன் மூலம் கிரகங்களின் வளிமண்டலம் எதனாலானது என்பது நமக்குத் தெரியவரும். இது தவிர, செவ்வாய் கிரக ஆய்வுக்கான லேண்டர் திட்டங்களும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன. அதேசமயம், வீனஸ் (சுக்கிரன்) பயணத்திற்கான 2 கருவிகள் தயாராகி வருகின்றன. வீனஸ் மேற்பரப்பு பூமியை விட 100 மடங்கு வளிமண்டல அழுத்தத்தை கொண்டுள்ளது. ஆனால், இதற்கான காரணங்கள் தெரியவில்லை. மேலும், வீனஸை சூழ்ந்திருக்கும் அடர்த்தியான மேகங்கள் அமிலத்தால் நிரம்பியுள்ளன. இதனால் மேற்பரப்பைக் கூட ஊடுருவ முடியாது.

எனினும், வீனஸ் போன்ற கிரகங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது அவசியமாகும். வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களை ஆய்வு செய்தால், பூமியில் நம்முடைய செயல்பாடுகளினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய முடியும். எல்லவற்றுக்கும் மேலாக, இஸ்ரோவின் இந்தாண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில், இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ ‘எக்ஸ்ரே போலரிமீட்டர்’ அல்லது ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோளை டிசம்பரில் ஏவ இஸ்ரோ தயாராக இருக்கிறது.

450 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோள் பிரகாசமான எக்ஸ்ரே பல்சர்களின் துருவமுனைப்பை அளவிடுவதற்கும், பிரகாசமான கருத்துகள் மூலங்களின் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கும் 2 கருவிகளை கொண்டுள்ளது. தற்போது எக்ஸ்ரே மூலங்கள் ஆற்றல், நேரம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை அளவிடுகின்றன” என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.