இனி ஆண்கள் அப்படிச் சொன்னால், புளுகுகிறார்கள் என்றே அர்த்தம்…

சுடுதண்ணி வைக்கக்கூடத் தெரியாது என்று மற்றவர்களிடம் உண்மையிலேயே  வெகுளியாகவோ அல்லது பீட்டர் விடுவது ஆண்களின் வழக்கம். ஆனால் இனி அப்படியொரு நிலை கிடையவே கிடையாது..

“சமையல்னா அது லேடீஸ் மேட்டர், ஜென்ட்ஸ்சக்கு கிச்சன்ல வேலை கிடையாதுன்னு யாராவது சொன்னா அவர் பச்சை பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்.

ஆம்… இந்த கொரோனா ஊரடங்கு பல ஆண்களைச் சமையலறைக்குள் இழுத்து கிச்சன் கில்லாடிகளாக ஆக்கிவிட்டது என்பதே அப்பட்டமான உண்மை..  பெங்களூருவைச் சேர்ந்த அஸ்வின் நாயர் சொல்வதைக் கேளுங்கள்..

“ஊரடங்கு அமல்படுத்தியதும் வேலைக்கார பெண்ணை ஒரு மாசத்துக்கு வர வேணாம்னு சொல்லிட்டோம்.  என் மனைவி ஒர்க் பிரம் ஹோம்ல ரொம்ப பிசி ஆகிட்டாங்க.  எனக்கு டிராவல் லைன் ஒர்க்ங்கிறதால நிறைய நேரம் மிச்சமிருந்தது. சரி ட்ரை பண்ணி பாக்கலாமேனு தான் ஆரம்பிச்சேன்.  இப்போ முழு நேர சமையல்காரன் ஆகிட்டேன்.  இப்போ என் சமையலை வீடியோ எடுத்து யூடியூபில் போடுறளவுக்கு தேறிட்டேன்.  ஆனா சமையல் பண்ணும் போது பண்ற தப்புக்களை நான் எடிட் பண்ணாம அப்டியே போட்டுடறேன்.  அதும் ஜாலியா தான் இருக்கு” என்று கூறி சிரிக்காறார் இந்த பெங்களூரு அஸ்வின் நாயர்.

மும்பை நிகஞ்ச் காக்கின் கதையோ வேறு விதம்.  “லாக்டவுன் ஆரம்பிச்சு முதல் நாள் எப்டியோ ஓட்டிட்டேன்.  அடுத்த நாளிலிருந்து கிச்சன்குள்ள போனா தான் சாப்பாடுங்கிற நிலமை.  வேற வழியில்லாம சமையல் வீடியோக்களை பார்த்து ஆரம்பிச்சேன்.  இடையில ஏதாவது சந்தேகம்னா அம்மாக்கு போன் பண்ணி கேட்டுக்குவேன்” என்று தன் சமையல் அனுபவத்தை பகிர்கிறார் நிகஞ்ச்.

ஆனால் சென்னையைச் சேர்ந்த இம்மானுவேல் லியோன் பிரான்சிஸ், “இந்த ஊரடங்கின் போது சமைக்க கத்துக்க ஆரம்பிச்சு நான் இப்போ இண்டியன் புட்ஸ்சை தாண்டி, இத்தாலி, அமெரிக்க உணவு வகைகளில் அசத்தும் அளவு தேறிட்டேன்.  அவ்வளவு ஏன், இந்தளவு அருமையா ஐஸ் க்ரீம் எல்லாம் செய்வேன்னு நெனைச்சு கூட பார்த்ததில்ல நான்.  இப்டியே போனா நானே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை ஆரம்பிச்சடுவேன்னு நினைக்கிறேன்” என்று கூறி சிலாகிக்கிறார் பெருமையாக.

இதில் சிரமங்களும் இல்லாமல் இல்லை.  நிகஞ்ச், “ஆரம்பிச்ச புதுசில கட் பண்ணின வெங்காயத்தை ஈரத்தோட சூடான எண்ணைல போட்டு எண்ணை வெடிச்சி தெறிச்சு ஒரே களேபாரமாகிடுச்சு” என்று சிரிக்கிறார்.

இம்மானுவேலோ, “என் கை நகங்கள்ளாம் கூட வெட்டி எப்போதும் சுத்தமா இருக்கும்.  ஆனா இப்போ பாருங்க, வெட்டு காயம், அடுப்பில சூடு வாங்கின தழும்புனு கையே ஒரு மாதிரி ஆகிடிச்சு” என்று வருத்தப்படுகிறார்.

ஆனால், விளையாட்டாக தொடங்கிய இந்த சமையல் சமாச்சாரங்களை இவர்கள் நிறுத்தப்போவதில்லை என்கின்றனர் உறுதியாக.  “சமைக்கிறது ஒரு சந்தோசத்தை குடுக்குது.  அதனால இனி இது கண்டிப்பாக தொடரும்” என்கிறார் அஸ்வின்.  அதேபோல நிகஞ்சும், “கண்டிப்பாக சமையலை இனி நான் நிறுத்தப்போறதில்ல.  இவ்ளோ கஷ்டப்பட்டு கத்துக்கிட்ட ஒரு விசயத்தை ஏன் நிறுத்தணும்?” என்கிறார்.

எப்படியோ வீட்டுப்பெண்களுக்கு அடுப்படி சிறையிலிருந்து சமயம் கிடைக்கும்போதெல்லாம் கணவன்மார்களால் தற்காலிக விடுதலை கிடைத்தால் சரி.

– லெட்சுமி பிரியா