சான்டா கிளாரா:
50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா -கியூபா இடையே முதன்முறையாக வர்த்தக ரீதியான விமான போக்குவரத்து துவங்கியது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானம் கியூபா சென்றடைந்தது.
americ flight
அமெரிக்கா-கியூபா நாடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பகைமை கொண்டிருந்தன. தற்போது இருநாடுகளும் பகைமை மறந்து நட்பு நாடுகளாயின. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா , கியூபா சென்று அந்நாட்டுஅதிபர் ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. பின்னர் இரு நாடுகளிடையே தூதரகங்கள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதன்முறையாக அமெரிக்கா- கியூபா இடையே வர்த்தக ரீதியான விமான போக்குவரத்து துவங்கியது.
ஜெட்புளு என்ற விமான நிறுவனத்தின் ஏ.320 விமானம் 150 பேருடன் தெற்கு புளோரிடாவில் இருந்து புறப்பட்டு, கியூபாவின் சான்டா கிளாரா விமான நிலையம் சென்றடைந்தது.
விமானத்தில் அமெரிக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆன்டணி போக்ஸ், ஜெட் புளு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராபின் ஹே உள்ளிட்டோர் பயணித்தனர்.
இதற்கு முன்னர் கடந்த 1961-ம் ஆண்டு இரு நாடுகளிடையே கடைசியாக விமான சேவை நடந்தது என்பது குறி்ப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் விமான சேவை துவங்கியுள்ளது.