சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான்  முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் கலசப்பாடி என்ற மலை கிராமத்திற்கு சாலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  
இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அப்பகுதி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் சாலை அமைக்க  ரூ.5 கோடியே, 75 லட்சத்துக்கு 54ஆயிரத்து  27 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தருமபுரி அரூர் அடுத்த சித்தேரி மலைக் கிராமத்தில் 64 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை. வனப் பகுதியை கடந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.  இதனால், இதனால் கிராம மக்கள் விவசாயப் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், வெளியூர் வேலைக்குச் செல்வதற்கும், மருத்துவமனை செல்ல முடியாமலும் தவித்து வந்தனர்.

இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தும்,  ஆட்சியரை சந்தித்து மனு அளித்தும், அவர்களின் கோரிக்கைள் இதுவரை நிறை வேற்றப்படவில்லை. இது தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகளின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது அப்பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.  அப்போது அங்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் எம்.பி. , வாக்கு சேகரிக்க சென்றபோது, அப்பகுதி மக்கள், சாலை வசதி கோரிக்கை வைத்தனர்.  அவரும் செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, அவர் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் சாலை அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அந்த பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் வாக்கு கிடைக்காது என்பதால்,  கடந்த ஆண்டு (2023) நாடாளு மன்றத்தில் இதுதொடர்பாக பேசியதுடன், தமிழ்நாடு அரசிடம் பேசி நிதி ஒதுக்கி ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதைடுத்து அந்த பகுதிக்கு செல்ல சாலை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது .

அதன்படி, இதனைத்தொடர்ந்து மத்திய அரசு வாச்சாத்தி முதல் கலசப்பாடி, அரசநத்தம் கிராமங்களுக்கு ஐந்து கிலோமீட்டர் சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளது.  மேலும், தவனப்பகுதியில் உள்ள ஐந்து கிலோமீட்டர் சாலை அமைப்பதற்குத் தேவையான நிலத்தினை தொப்பூர் அருகே உள்ள கம்மம்பட்டி பகுதியில் தேர்வு செய்து, நிலம் ஒப்படைக்கப்பட்டது.

சாலை அமைப்பதற்கான அனுமதி கிடைத்ததை கிராம மக்களிடம் நேரில் சென்று தருமபுரி செந்தில்குமார் தெரிவித்தார். இது அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

ஆனால், சாலை அமைப்பதற்கான நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்காமல் இருந்து வந்ததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதுவும் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த பகுதி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நினைத்து, தற்போது சாலை பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  அடுத்த ஆறு மாத காலத்திற்குள் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின்கீழ் வாச்சாத்தி முதல் அரசநத்தம், கலசப்பாடி மலைக் கிராமங்களுக்கு வனப் பகுதியில் சாலை அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.5 கோடியே, 75 லட்சத்துக்கு 54ஆயிரத்து  27 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.