சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நாளை  மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக தியைரங்குகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

புதிய படங்களை தியேட்டரில் வெளியிட  தயாரிப்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதால்,  பழைய திரைப்படங்களை வெளியிட  தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்   கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.  தற்போது அதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் திறக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. அதையடுத்து, தமிழகத்திலும், தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 10ந்தேதிமுதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிப்பதாக  அக்டோபர் 30ந்தேதி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி, 50 சதவீதம் இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும்  நாளை  திறக்கப்பட உள்ளன. திரையரங்குகளைத் திறப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் திரையரங்கு உரிமையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில் நாளை திறக்கப்பட உள்ள திரையரங்குகளில் புதிய படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படத் தயாரிப்பு நடவடிககைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால்,  திரையரங்குகளுக்க வழங்கப்படும் வி.பி.எஃப். கட்டணம் கட்ட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் போா்க்கொடி தூக்கியுள்ளனா்.

இதனால் மீண்டும் தயாரிப்பாளா்கள் – திரையரங்கு உரிமையாளா்கள் இடையே முட்டல் மோதல்  தொடங்கியது. அதையடுத்து, பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும், இதுவரை  எந்தவொரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறத.

இந்த நிலையில்,  புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், திட்டமிட்டபடி திரையரங்குகளைத் திறக்க திரையரங்க உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஈரோடு சுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து, கொரோனா பொது முடக்கம் காரணமாக, நிறுத்தப்பட்ட படங்களான ‘தாராள பிரபு’, ‘ஓ மை கடவுளே’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஆகிய படங்கள் மீண்டும் திரையிடும் நடவடிககைகள் தொடங்கப்பட்டு அதற்கான  டிக்கெட் முன் பதிவுகளும் நடைபெற்ற வருகிறது.

இதற்கிடையில்,  நாளை திறக்கப்பட உள்ள திரையரங்குகளில், தீபாவளியை முன்னிட்டு  புதிய படங்களை வெளியிட  ஒரு தரப்பு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்கோத்’, ‘அட்டு’ ரிஷி ரித்விக் நடித்துள்ள ‘மரிஜுவானா’, யோகி பாபுவின் ‘பேய் மாமா’ , ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் தீபாவளி பண்டிகையை யொட்டி வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.