சென்னை:  ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தலையொட்டி, ஒடிசா மாநிலத்தில்   கடந்த மே 20-ம் தேதி  பிரசாரம் மேற்கொண்ட மோடி, “பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது” என்று பேசினார். அதாவது, ஒடிசா மாநில முதல்வரின் ஆலோசகராக  தமிழ்நாட்டைச்சேர்ந்த வி.கே.பாண்டியன் இருந்து வருகிறார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், தனது  தனது ஐஏஎஸ் பணியை உதறிவிட்டு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக செயல்பட்டு வருகிறார். இதை குறித்து பிரதமர் மோடி பேசியதை,  வி.கே.பாண்டியன் ஒரு தமிழர் என்பதால், அவரையும் ஒட்டுமொத்த தமிழரையும் குறிப்பிட்டு மோடி கடுமையாக பேசியதாக  தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், விமர்சித்து வருகின்றன. 

ஒடிசா மக்களின் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பேசி, தமிழ்நாட்டையும், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் மோடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இவரை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளும் பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதுபோல, அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என கூறி வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழர்களை இழிவாக பேசியுள்ளதாகவும், ஒரு வாரக் காலத்துக்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’, என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள செல்வபெருந்தகை, ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பலனடைந்த கோடீஸ்வரர்களில் முதன்மையானவராக அதானி விளங்கி வருகிறார். அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷியாவில் இருந்து மலிவான விலைக்கு வாங்கிய, தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு மோசடியாக விற்று அதானி குழுமம் 3,000 கோடி ரூபாய் கொள்ளை லாபம் ஈட்டியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துகிற மின்உற்பத்தி நிறுவனங்களால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் இந்தியர்களை பலி வாங்குவதாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சட்டத்தை மீறி இந்தியர்களை சுரண்டுவதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியை 2014 ஆம் ஆண்டு முதல் 22 முறை கப்பல் மூலம் 1.5 மில்லியன் டன் அனுப்பியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த கலோரி அளவை கொண்டிருப்பதால் நிலக்கரியின் தரம் குறைந்திருக்கிறது. இத்தகைய நிலக்கரி விற்கப்பட்டதன் மூலம் அதானி குழுமம் கோடிக்கணக்கான ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.
எனவே, தரம் குறைந்த நிலக்கரியை விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டிய அதானி குழுமத்தின் மிகப்பெரிய மெகா ஊழல் வெளிவந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழு இதுகுறித்து விசாரித்து உண்மையை மக்கள் மன்றத்தில் வைக்கும் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகியிருக்கிறது.
இவ்வாறு கூறி உள்ளார்.