41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி

Must read

டோக்கியோ

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.  அதன் பிறகு அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறவில்லை.   கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி காலிறுதியில் தோல்வியைத் தழுவியது.

இன்றைய ஒலிம்பிக் போட்டிகளில் நடந்த ஹாக்கி காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியும் இந்திய அணியும் மோதின. போட்டி தொடங்கியதிலிருந்தே இந்திய வீரர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டனர். போட்டியின் 3-வது நிமிடத்தில் பிரிட்டன் அணியினருக்குக் கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக்கவிடாமல் இந்திய அணியினர் தடுத்தனர். பிறகு 7-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங்கிடம் இருந்து கிடைத்த பாஸை சரியாகப் பயன்படுத்திய தில்பிரித் சிங் பிரிட்டன் அணியினரை ஏமாற்றி அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்திய வீரர் தில்பிரித் சிங் 7 ஆம் நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.  முதல் கால் பகுதி முடிவில் இந்திய அணி 1:0 என்னும் கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.  இரண்டாம் கால் பகுதி தொடக்கத்தில் இந்திய வீரர் குர்ஜித் சிங் இரண்டாம் கோலை அடித்தார். அதன் பிறகு மூன்றாம் கால் பகுதியில் 45 ஆம் நிமிடம் பிரிட்டனின் பிலிப் ரோப்பர் முதல் கோலை அடித்தார்.

நான்காம் கால் பகுதியில் இரு அணிகளும் கடுமையாக முயன்றும் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில் இந்திய வீரர் நிலாகந்தா சர்மாவின் உதவியுடன் ஹர்திக் சிங் மூன்றாம் கோலை அடித்தார்.  அதன் பிறகு என்ன முயன்றும் பிரிட்டனால் கோல் அடிக்க முடியாததால் இந்திய அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

 

More articles

Latest article