மும்பை,

10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சட்ட போராட்டத்தின் பலனாக மும்பை மாநகராட்சி சுகாதார தொழிலாளர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டனர்.

மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 2700 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர்.

தூய்மைப்பணிகளில் ஈடுபடும் இவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் முகமூடி, கை உறைகள், சம்பளத்துடன்கூடிய விடுப்பு, மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகள்  வழங்கப்படுவதில்லை.

சுகாதாரமற்ற சூழலில் பணியாற்றியதால் 1386 ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்தான் இவர்கள்,  மும்பை மாநகராட்சி தங்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்தவேண்டும் எனக்கோரி கடந்த 2007 ம் ஆண்டு மும்பை தொழிலாளர் தீர்ப்பாயத்தில்  வழக்குத் தொடர்ந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என உத்தரவிட்டது.  இதை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற மும்பை மாநகராட்சிக்கு தோல்வியே கிடைத்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கின் தீர்ப்பு கொல்கத்தா, சென்னை, டெல்லி, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றிவரும் சுகாதார தொழிலாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.