ஆகஸ்ட் 31 ம் தேதி, ஆப்கான் மண்ணை விட்டு அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு முன்பே துரிதமாக செயல்பட்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது தாலிபான்.

ஆப்கான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தாலிபான்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஐக்கிய அரபு நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

நாட்டை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களின் நிலை பொரியில் அகப்பட்ட எலிபோல் நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்றாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது.

தங்கள் தரப்பில் ஆட்சிக்குத் தலைமை ஏற்கப் போவது யார் என்பது குறித்து தாலிபான்களால் தெளிவான முடிவை இதுவரை எட்ட முடியவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 67000 கோடி ரூபாய், 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள கையிருப்பு தங்கம் மற்றும் வெள்ளி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசம் உள்ள 2700 கோடி ரூபாய் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த உதவித்தொகைகள் மற்றும் உதவிப் பொருட்களும் நின்று போயுள்ளதால் செய்வதறியாது விழித்து வருகிறார்கள் தாலிபான்கள்.

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய அரசு ஆப்கானில் அமைவது தள்ளிப்போகும் பட்சத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் பல்வேறு சிக்கலைச் சந்திப்பதோடு அண்டை நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் எதிரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.