பெங்களுரூ:
பெங்களூருவில் இன்று நடைபெறும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத்துறை, கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி செய்துள்ளது. விமான கண்காட்சியில் மொத்தம் 807 அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும், அவற்றில் 107 அரங்குகள் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான கண்காட்சியில் நமது நாட்டை தவிர வெளிநாடுகளை சேர்ந்த விமானங்களும் விண்ணில் பறந்து சாகசங்களில் ஈடுபட உள்ளன. குறிப்பாக இந்தியா பெவிலியனில் இருந்து தேஜஸ் போர் விமானம் முதல் முறையாக விமான கண்காட்சி பங்கேற்க உள்ளது. விமான கண்காட்சி காரணமாக பிரதமர் வருகை காரணமாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெறும் விமான கண்காட்சியை கண்டுகளிக்க பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு நபர் ரூ.2,500 கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொண்டு கண்காட்சிக்கு சென்று விமானங்களின் சாகசங்களை பார்த்து ரசிக்க முடியும்.