சென்னை
வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்து 8 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிமுக தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் இனி அதிமுகவில் ஒற்றை தலைமை கிடையாது எனவும் இரட்டைத் தலைமை மட்டுமே கட்சியை வழி நடத்தும் எனவும் சிறப்புத் தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடந்து 8 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“சட்ட திட்ட விதி 30, பிரிவு – 2ன்படி கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையாளர்கள்:
பொன்னையன் அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
பொள்ளாச்சி வி. ஜெயராமன், எம்.எல்.ஏ., அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
வேட்பு மனு தாக்கல்:
3.12.2021 வெள்ளிக் கிழமை முதல் 4.12.2021 சனிக் கிழமை வரை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை).
வேட்பு மனு பரிசீலனை:
5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி
வேட்பு மனு திரும்பப் பெறுதல்
6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை.
தேர்தல் நாள்:
7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு
8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது