துரை

மு க அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான கிரானைட் முறைகேடு வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் பேரனும் மத்திய முன்னாள் அமைச்சர் முக அழகிரியின் மகனுமான துரை தயாநிதி ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார்.  இந்நிறுவனம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு ரூ. 259 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இந்நிறுவன பங்குதாரர்கள் துரை தயாநிதி, நாகராஜன், கனிமவளத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி ஜவகர் உள்ளிட்ட 15 பேர் மீது கீழவளவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.   இதில் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துரை தயாநிதி மனுத் தாக்கல் செய்தார்.   இந்த மனுவை இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெயச்ச்ந்திரன் ஆகியோரின் அமர்வு விசாரித்தது.   அப்போது துரை தயாநிதியின் மனுவைத் தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு இட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை தினசரி நடத்தி 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவு இட்டுள்ளனர்.