சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதிப் பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட எந்த தேர்வுகளும் நடத்தப்படாததால் மதிப்பெண் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லாமல் பாஸ் என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்தது. 12ம் வகுப்புக்கு எப்படி மார்க் வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழல் காரணமாக, உயர்கல்வி மாணவர் சேர்க்கை எதனடிப்படையில் நடைபெறும் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடக்கி வைத்தார். அதையடுத்த செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பத்தாம் வகுப்பு தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்தார்.

மேலும்,  சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பிற்கு வரும் 12ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,210 இடங்கள் உள்ளன, மாணவர் சேர்க்கைக்கு 52 இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.