இந்திய முதலீட்டாளர்களை கவர தனது நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக உயர்த்திகாட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் குற்றம் சுமத்தியது.

இதுகுறித்து இந்திய பங்கு வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பங்குகளின் விலையை மோசடியாக உயர்த்த அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை அதானி குழுமம் பயன்படுத்தியதா என்பது குறித்து புரூக்ளினில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகிய இரண்டும் விசாரித்து வருகின்றன.

இந்த ரகசிய விசாரணை குறித்து புரூக்ளினில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

ஜனவரி மாதம் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து சிக்கலில் சிக்கியுள்ள அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் இவ்விரு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்கு அழைக்கப்படுவதால் இந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் அல்லது சிவில் வழக்குகள் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஜில்லுக்கு வைரம் பரிசளித்து ஜோ பைடனை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதேவேளையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்காவின் இந்த விசாரணை குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, இந்திய பங்குச் சந்தையில் இன்று ஒரே நாளில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு சுமார் 10 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.