டப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது.


மடப்புறம் என்பதே சரியான சொல்லாகும். பல கோயில் கல்வெட்டுகளில் மடப்புறம் என்ற சொல் பயின்று வருகின்றது. கோயில் விளங்கும் இடத்தில் உள்ள மடத்திற்கு ஏதாவது கொடையளித்தால் அது மடப்புறமாக கருதப்படும். அவ்வாறு இந்தக் கோயில் மடப்புற வளாகமாக அமைந்துள்ளது.

இந்த கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கு பத்திரகாளி அம்மனின் இரு புறங்களில் பக்கத்திற்கு ஒன்றாக, இரண்டு பூதகணங்களின் தோள்கள் மீது, குதிரையின் கால்கள் தூக்கி வைத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் அய்யனாரும், வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலைகள் சாத்தி வழிபடுகின்றனர். இதுமட்டுமின்றி காளி வழிபாடு இங்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக பின்பற்றப்படுகிறது.

குதிரையின் அடிப்புறத்தில் பத்திரகாளியம்மன் நின்ற கோலம். மிகப்பெரிய வெண்குதிரை பாய்ந்த நிலையில் அதன் முன்னங்கால்கள் இரு பூதகணத்தாரின் தலை மேல் வைக்கப்பட்டுள்ளன. பத்திரகாளியம்மனைச் சுற்றிலும் பெண்கள் பக்தியுடன் அன்னைக்கு சமர்ப்பிக்க தட்டுகளுடன் நிற்கின்றனர். மிகப்பெரிய பீடத்தின் மீது பத்திரகாளியம்மன் எட்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். பீடத்தின் இருபுறமும் இரு காவல் பூதங்கள் பெரிய உருவத்தினராய் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பங்கள் அனைத்தும் சுதையால் செய்யப்பட்டு வண்ணந்தீட்டப்பட்டவைகளாகும்.

உச்சிக்கால பூசை, திருவனந்தல் பூசை, காலசந்தி பூசை, அர்த்தசாம பூசை என அனைத்து பூசைகளும் நடைபெறும் இந்த கோயிலில், மாசி மகாசிவராத்திரி, ஆடித் திருவிழா, தை வெள்ளி, பங்குனித் திருவிழா போன்ற திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.