சென்னை:

டிகர் சங்க தேர்தல் அதிகாரி சரியாக செயல்படவில்லை என்று நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ் அணியினர்  குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணி, சரத்குமார்-ராதாராவி அணியை தோற்கடித்து வென்றது. அதையடுத்து நடிகர் சங்க  தலைவராக நாசரும்,  பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது.

ஆனால் நடிகர் கட்டிட பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி,  புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப் பதற்காக தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் நடிகர் சங்க கூட்டம் நடந்தது . அந்த கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப் பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக  ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமயில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் இதற்கான ஆவணங்களையும் நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார்.

விஷால் அணிக்கு எதிராக நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் என்ற பெயரில் எதிரணி உருவானது. இதில் ஐசரி கணேஷ் உள்பட, விஷால் மீது அதிருப்தி கொண்ட பலர் இணைந்து போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், தேர்தல் அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்  நடிகர் சங்க தேர்தல் ஜுன் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவித்திருந்தாரர். ஆனால், நீதிமன்றம் உத்தரவு காரணமாக, அங்கு தேர்தல் நடைபெறுவது தடுக்கப்பட்டது. இந்த நிலையில், புகார் காரணமாக நடிகர் சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட பதிவுத்துறை அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில்,  நடிகர் சங்க தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி மீது சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் இருந்தே தேர்தல் நடத்தும் அதிகாரி சரியாக செயல்படவில்லை என ஐசரி கணேஷ் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தபிறகே தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக கணேஷ் புகார் கூறியுள்ளார்.