சென்னை: நடிகர் விவேக் மறைவிற்கும்,கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 15ந்தேதி கொரோனா தடுப்பூசி கோவாக்சின் போட்டுக்கொண்ட நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒருசாரார் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், மருத்துவர்களும், அரசும், தடுப்பூசிக்கும், அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி, 11-ம் மண்டலத்தில் இயங்கிவரும் போரூர் பகுதியில் இயங்கிவரும் கொரோனா ஸ்கிரீனீங் சென்டர் மையத்தை  ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், பின்னர் செய்தியாள்ரகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

கொரோனா பரவலின் இரண்டாம் அலையை தடுக்க மாநகராட்சி தரப்பிலும், சுகாதாரத்துறை தரப்பிலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை 25 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த அவர், சென்னை மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சென்னை முழுவதும் 12 ஸ்கிரீனிங் மையங்கள் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிரித்து அனுப்பப்படுவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும். இந்த மையங்களில் தடுப்பூசி போடப்படாது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கூறி வருவதாகவும், இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாககூறினார்.

இதையடுத்து, அவரிடம் விவேக் மரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரகாஷ்,  நடிகர் விவேக் மரணம் பெரிய பேரிழப்பாக கருதுகிறேன். அவர் இறப்பிற்கும், கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.