sivakumar_2789636f

அக்டோபர் 24, 2016, சென்னை: தேர்ந்த ஓவியரும், நடிகரும், சொற்பொழிவாளருமான சிவகுமாரது ஓவியக் கண்காட்சி பெருமைமிகு லலித் கலா அகாதமியில் இன்று ஆரம்பமாகிறது. புகழ்பெற்ற ஓவியரும், முன்னாள் ‘கவர்மெண்ட் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸின் தலைவருமான திரு. அல்போன்ஸா தாஸ் அவர்கள் முன்னிலையில் பிரபல ஓவியர்கள் திரு. மணியம் செல்வன், ஓவியர் திரு. ஸ்ரீதர், திரைப்பட நடிகர் கார்த்தி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். ஓவியர் சிவகுமார், 1958&1965 காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து, அவற்றை பத்திரமாக பராமரிக்கிறார். இந்த ஓவியத் தொகுப்பில் பென்சிலால் வரைந்த ஓவியங்கள், கிரேயானில் வரைந்தவை, வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங் ஆகியவை உட்படுகின்றன. இவற்றில் புகழ்பெற்ற பிரபலங்களும், தமிழ்நாட்டின் முக்கியத் தலங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியக் கண்காட்சியை, ஓவியர் சிவகுமாரின் புதல்வர்கள் திரு. சூர்யா, திரு. கார்த்தி ஆகியோர் சிவகுமாரது 75வது வெற்றிகரமான நிறைவு விழாவையொட்டி அக்டோபர் 24 முதல் 26 வரை
நடத்துகின்றனர்.

இந்த ஓவியக் கண்காட்சி குறித்து ஓவியர் சிவகுமார் கூறுவதாவது, ‘‘1959&65 ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்கள் எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த கால கட்டம். அது, சென்னையிலுள்ள ‘கவர்மெண்ட் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அன்டு கிராஃப்ட்’ஸில் நான் ஓவியம் பயின்ற நாட்கள். ஓவியக் கல்லூரியில் படிப்பை முடித்துக் கொண்டு வெளியேறியபோது, முதன் முறையாக அகன்ற வானில் சுதந்திரமாக இறக்கையாட்டிப் பறக்கும் புறா மாதிரி உணர்ந்தேன். அந்தக் கல்லூரியில் கழித்த ஆறு ஆண்டுகளும் என் வயதொத் த& திறமைவாய்ந்த ஆண்&பெண் மாணவர்களுடன் செலவழித்த காலம்& எனது வாழ்க்கையின் வசந்தகாலம் எனலாம்.

எந்தவிதமான எதிர்பார்ப்போ, எதிர்காலத் திட்டங்களோ இல்லாமல், பேப்பர், தூரிகை ஆகியவற்றுடன், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருப்பதி, திருவண்ணாமலை, அஜந்தா &எல்லோரா, டெல்லி, ஆக்ரா ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்து ஓவியங்களை வரைந்தேன். கிடைத்ததை சாப்பிட்டு, பிளாட்பாரங்களில் தூங்கிக் கழித்திருக்கிறேன். நாட்கணக்கில் நான் இப்படி வரைந்த ஓவியங்களை, என் சொந்தக் குழந்தைகளைப் போல் பத்திரமாகப் பராமரித்து வருகிறேன். இந்தியா முழுக்கச் சுற்றி, இந்த ஓவியங்களை வரைய அன்றைய காலக்கட்டத்தில் ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு மேல் செலவழித்திருக்கிறேன். இன்று ஒரு குடும்பம் முழுக்க ஒரு வேளை உணவை ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிட பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். அப்போது நான் மிகவும் சாதாரண சாப்பாட்டை மூன்று வேளையும் சாப்பிட்டு, மிகவும் குறைவான உடைகளுடன், ஏறத்தாழ ஒரு சாமியார் போலவே அந்த நாட்களில் வாழ்ந்தேன். அந்தக் காலத்தை நினைவு கூரும்போது, அப்போது நான் வரைந்த இந்த ஓவியங்களுக்காகப் பெருமிதப்படுகிறேன். எனது 75வது நிறைவு விழா மற்றும் 50 ஆண்டுகளுக்கு முன் நான் வரைந்த ஓவியங்களை வைத்து ஓவியக் கண்காட்சி நடத்தும் பொறுப்பை என் பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்தியிடம் ஒப்படைத்தேன். இது எனது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. இப்போது எனது ஓவியங்கள் கௌரவிக்கப்படும்போது, நான் புதிதாக பிறந்ததைப்போல் உணர்கிறேன். வருங்காலத் தலைமுறை இதன் மூலம் பலனடைந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்!

ஓவியர் சிவகுமார் குறித்து:

ஓர் ஓவியராக தன்னை வளர்த்துக் கொண்ட சிவகுமார் 1965&இல் ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் ஒரு நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார். 192 படங்களில் நடித்துள்ள சிவகுமார் இவற்றில் 170 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார். அதே மாதிரி இரு முறை ஃபிலிம்பேர் பத்திரிகையிலிருந்து சிறந்த நடிகருக்கான விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.

இப்போது இவர் பிள்ளைகள் சூர்யா, கார்த்தி இருவரும் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களாக விளங்குகின்றனர். இவர்கள் திரையுலகில் அறிமுகமான பிறகு சிவகுமார் 4 ஆண்டுகள் சின்னத்திரையிலும் தனது பணியைத் தொடர்ந்திருக்கிறார். 40 ஆண்டு காலத்தை சினிமா மற்றும் சின்னத்திரையில் செலவழித்துள்ளார். அதன்பின் சொற்பொழிவைக் கையில் எடுத்துக் கொண்ட சிவகுமார் 13&க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி அவை டி.வி.டி&களாகவும், புத்தகங்களாகவும் வெளியாகியுள்ளன.

சிவகுமாரது ஓவியக் கண்காட்சி கிரீம்ஸ் ரோட்டிலுள்ள லலித் கலா அகாதமியில் அக்டோபர் 24 முதல் 27&ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 27&ஆம் தேதி இவரது 140 ஓவியங்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படுகிறது. சிவகுமாரின் 75 & வது நிறைவு நாளையொட்டி வெளியாகும் இந்தப் புத்தகம் வருங்காலத் தலைமுறைக்கு பயன்படும் என்று நம்புகிறோம்.