சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலை யில், விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

ஏற்கனவே விஷால் அணியினர் கவர்னரை சந்தித்துள்ள நிலையில்,இன்று பாக்யராஜ் தலைமை யிலான அணியினர் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டது.  நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை விட பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகர் சங்க தேர்தலில், ஏற்கனவே  கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடு கின்றனர்.

இதற்கிடையில், நடிகர் சங்க தேர்தலை  ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, விதிமுறைகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அதற்கு விஷால் தரப்பில் இருந்து பதில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.

மொத்தம் 68 பேர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல டைரக்டர் மற்றும் நடிகர்  ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு அணிகளும் மூத்த நடிகர்கள், பிரபல நடிகர்களை சந்தித்தும், நாடக நடிகர்களை தேடிச் சென்றும் ஆதரவு கோரி வந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.  அதைத்தொடர்ந்து, நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக சங்கத்துறை பதிவாளர் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். இதன் காரணமாக நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அதையடுத்து, இன்று  தமிழக ஆளுநர் புரோகித்துடன் சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ், குட்டி பத்மினி, பிரசாத், சங்கீதா ஆகியோர் சந்தித்தனர்.