சென்னை

விரைவில் பெண்கள் கோவில் அர்ச்சகர் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்

இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டம் இயற்றப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.  அவ்வகையில் ஆண்கள் மட்டுமே அர்ச்சகராக உள்ள நிலையில் பெண்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என பல அமைப்புக்கள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று இந்த துறையின் அமைச்சர்  சேகர்பாபு மண்டல ஆணையர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார் .  அந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் சேகரபாபு செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அப்போது சேகர்பாபு, “மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்னும் பதாகைகள் வைக்கப்பட உள்ளன.  அந்த பதாகையில் தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விவரங்கள் இடம் பெற உள்ளன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டம் இன்னும் 100 நாட்களில் செயல் படுத்தப்பட  உள்ளது. பலரின் கோரிக்கைகளுக்கு இணங்க விரைவில் பெண்களும் கோவில் அர்ச்சகர் ஆக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.