சென்னை,

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிட்டால், என்மீது ஆசிட் வீசுவோம் என்று மிரட்டி யதாக ஜெ.தீபா திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். மேலும்,  அதிமுகவிற்கு தோல்வி நிச்சயம் என்ற பயத்தின் காரணமாகவே எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் உள்பட, சுயேச்சையாக டிடிவி தினகரன் மற்றும் ஏராளமான சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, நேற்று நள்ளிரவு தேர்தல் அலுவலரை சந்திக்க சென்ற தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என்று கூறி தீபா, தன்னை அதிமுக வினர் மிரட்டுகின்றனர் என்ற பகீர் தகவலையும் கூறினார்.

வேட்பு மனு தாக்கல் செய்தால் நாங்கள் எந்த அளவிற்கும் செல்வோம் என்பது உங்களுக்கு தெரியும் என்றும், உங்களது வேட்பு மனுவைக் கூட தள்ளுபடி செய்வோம் என்றும்,  என் மீது ஆசிட் வீசுவேன் என்றும் கொலை மிரட்டல் கூட விடுத்தார்கள் என்ற தீபா, நான் அதற்கு பயப்படவில்லை என்றும், தேர்தலில் போட்டியிடுவதில் நான் உறுதியாக இருந்தேன் என்றார்.

கடந்த முறை அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலின்போதுகூட எனது மனுவை  நிராகரிக்கச் செய்வோம் என்றவர்கள், இந்த முறை அதை நிறைவேற்றி உள்ளனர் என்ற தீபா, ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அத்தையை பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது என்றார்.

என்னுடைய வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கும் என்பதால் திட்டமிட்டு எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது,  நான் போட்டியிடக் கூடாது என்பதற்காக தேவையில்லாத காரணத்தை சொல்லி மனுவை நிராகரித்துள்ளனர்.

இவ்வாறு தீபா கூறி உள்ளார்.