டில்லி

மத்திய அரசு  நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முதல் நாளில் 75 ஆண்டுக் கால சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

வரும் 18 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடாதது எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைப் பெற்றது.  நேற்று சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளில் நடைபெறும் முக்கிய விவாதம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது.

சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளில் அரசியல் நிர்ணய சபை முதல் கடந்த 75 ஆண்டுக் கால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், கற்றல்கள் என பல்வேறு அம்சங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்களும் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.  தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே  இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வழக்குரைஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிகைகள் பதிவு மசோதா 2023 போன்ற மசோதாக்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இதைத் தவிரத் தபால் அலுவலக மசோதா 2023 மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.