திருச்சி: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 10,12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு டேப்லெட் பிசி வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுகாதார பணிகள் இன்று அங்குள்ள துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகிறது. அந்த ஆலோசனைகள் அடிப்படையிலும், சி.பி.எஸ்.சியில் எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளார்கள் என்பதையும் ஆராய்ந்து அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.

10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணபித்துள்ள தனித் தேர்வர்களை கவனத்தில் கொண்டுள்ளோம். மதிப்பெண் வழங்குவதா அல்லது தேர்வு நடத்துவதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எந்தபள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம். அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு லட்சம் மடிக்கணினி இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அந்த மாணவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி டேப்லெட் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.