நாமக்கல்;  நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். அதுபோல  திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே கார் மோதி 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் எனும் ஊரில் உள்ள புகழ்பெற்ற பொன்னர் – சங்கர் கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் ஒரு காரில் வந்துள்ளனர். கோயில் விழா முடிந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகையில் நாமக்கல், பரமத்திவேலூர் பகுதியில் நின்று கொண்டிருந்த கன்டென்டர் மீது இவர் சென்ற கார் மோதியது.

அதிவேகத்தில் வந்த கார் நின்றுகொண்டிருந்த  கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில், அந்த காரில் பயணித்த 5 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த குழந்தை மற்றும் ஒரு நபர் மட்டும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அதிகாலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இன்று காலை,  திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே கார் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை பள்ளிக்கு செல்ல  சைக்கிள்களில் வந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. கார் மோதியதில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். சாலையை கடக்க முயன்ற மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் கோயம்பேடு புதிய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். விரைவு ரயில் மோதி பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நிகிதா (19) உயிரிழந்தார்.