டோதரா

டோதரா சட்ட மன்ற உறுப்பினர் தன்னை சூழ்ந்து கோஷமிட்ட பெண்களிடம் தன்னை திட்டவேண்டாம் எனவும் மோடியை திட்டவும் என கூறி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சமூக நல சுகாதார பணியில் (ASHA) பல பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  ஆங்கிலத்தில் ஆஷா என அமைக்கப்படும் இந்த அமைப்பை சார்ந்த பெண் பணியாளர்கள் வெகு நாட்களாக தங்களை அரசுப் பணியாளராக மாற்ற வேண்டும் எனவும், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் தங்களுக்கு அளிக்கப்படவேண்டும் எனவும் போராடி வருகின்றனர்.

சென்ற மாதம் சயாஜிகுஞ்ச் தொகுதியின் பா ஜ க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.  அரசு செவி சாய்க்காததால் வடோதரா சிடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மனிஷா வக்கீலின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப் படவில்லை.  இதனால் சென்ற வாரம் தங்கள் கோரிக்கைக்காக இந்த அமைப்பை சார்ந்த பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.  ஆனால் அதுவும் அரசின் கவனத்தை ஈர்க்கவில்லை.

இதன்பின் நேற்று வடோதராவின் கர்ஜன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் படேலை சூழ்ந்துக் கொண்டு தங்களின் கோரிக்கைக்காக கோஷம் எழுப்பினர்.  சதீஷ் படேல், “நீங்கள் என்னை திட்ட வேண்டாம்.  மோடியை திட்டுங்கள்” எனக் கூறி விட்டு வேகமாக தனது வாகனத்தை நோக்கிச் சென்றனர்.  ஆனால் அவரை விடாமல் பின் தொடர்ந்த பெண்கள் அவரது காரை மறித்து பா ஜ க வை விமரிசித்து கோஷங்கள் எழுப்பினர்.  அத்துடன், “குஜராத் சர்க்காரே, தூக்கத்தில் இருந்து விழித்து சுயநினைவுக்கு வா” எனவும் கோஷம் எழுப்பினர்.  பிறகு போலிசார் வந்து சட்டமன்ற உறுப்பினரின் வாகனம் செல்ல வழியமைத்து கொடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஆளும் பா ஜ க வுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வருவதும் ஆனந்த் நகரில் நடைபெற்ற அமித்ஷா வின் பொதுக் கூட்டத்திலும் பலர் கட்சியை விமரிசித்து கோஷங்கள் எழுப்பியதும் குறிப்பிடத் தக்கது.

[youtube https://www.youtube.com/watch?v=_lylSJJnW08]