சென்னை: நேரடியாக ஆளும்கட்சியே வென்றுவிட்டதாக அறிவிக்க வேண்டியது தானே, இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆளும் கட்சியினர் அந்த தொகுதி கைகளை மற்ற கட்சியினடர் சந்திக்க முடியாதவாறு, அவர்களை பல்வேறு இடங்களில் அடைத்து வைத்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருவதுடன், பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை வீடியோ எடுத்து ஊடகத்துறையினர் தாக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்பட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தனியார் சமூக அமைப்புகளும் தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளித்துள்ளனர். ஆனால், அதன்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லலை. இதற்கிடையில், கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தேமுதிக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
‘பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதோ? பணத்தை பிரதானப்படுத்தி மக்களை சந்திப்பது சரிதானா? ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்றுவிட்டதாக அறிவிக்க வேண்டியது தானே!
இங்கு நியாயமான முறையில் தேர்தலை சந்திக்கும் கட்சிகளின் நிலை என்ன? இனியாவது ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறுவதை மக்களும் தவிர்க்க வேண்டும்.’
என தெரிவித்துள்ளார்.