வங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனில் ஓணம் பண்டிகையை கொண்டாடியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபருமான விஜய் மல்லையா கடன் தொல்லைகள் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறிய விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். 17க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ரூபாய் 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தவில்லை மல்லையா. அவர் தற்போது லண்டனில் இருப்பதால் இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் இங்கிலாந்து உயர் வணிக நிதீமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து வழக்குகளை சந்தித்து வரும் விஜய் மல்லையா, லண்டனில் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் மேற்கொண்டுள்ள பதிவு ஒன்றில், “லண்டனில் மிக அருமையான ”ஓணம் சதயம்” விருந்து  கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

விஐய் மல்லையாவின் இந்த பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, சாமானியனுக்கு ஒரு சட்டம் – பண பலம் படைத்தவருக்கு ஒரு சட்டமா ? என்கிற கேள்வியையும் சமூகவலைதள வாசிகளிடம் எழுப்பியுள்ளது.