அம்மா பற்றி “அம்மா!”: ஜெயலலிதாவின் நெகிழ வைக்கும் வீடியோ பேட்டி

Must read

நினைவுகள்:
ஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய தருணங்கள் உண்டு.
ஆனால் அவரது இயல்பான தன்மையை வெளிப்படுத்தும் பேட்டி இது.  பல வருடங்களுக்கு முன்,  ஊடகவியலாளர் சிமி எடுத்த, Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற நிகழ்ச்சிக்கான பேட்டி இது.
சில கேள்விகளுக்கு வெட்கப்புன்னகையுடன் பதில் அளித்து, பாடி, தனது இளமைக்காலம் குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்து… வித்தியாசமான பேட்டி இது.
தனது பதில்களுக்கான (ஆங்கில) வார்த்தைகளை, மிகச் சரியாக தேர்ந்தெடுத்து பதில் அளிக்கிறார் ஜெயலலிதா.
அந்த பேட்டி உங்களுக்காக தமிழில்…

சிமி - ஜெயலலிதா
சிமி – ஜெயலலிதா

சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கை என்பது   மிக துணிச்சலான பயணம். எந்தவொரு திரைப்படத்தைவிடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா ?
ஜெ:  ஆம்..! அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life )
சிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை.  இதை நினைத்து எப்போதாவது எரிச்சல், பயம், ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறதா? அதை வெளிக்காட்டி உள்ளீர்களா?
ஜெ: நிச்சயமாக. நானும் மற்றவர்களைப்போன்ற மனுஷிதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம். அதே நேரம், ஒரு தலைவராக இருக்கும்போது உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்ள வேண்டியிருக்கும்.
சிமி: பொதுவாக  எப்போதுமே  மிக சாந்தமான தோற்றத்தில் இருக்கிறீர்கள்.  அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் மறைந்திருப்பது என்ன?
ஜெ: (கலகலவென்று சிரிக்கிறார். பிறகு சிறிது இடைவெளி விட்டு) பொதுவாக என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே பூட்டிக்கொள்கிறேன். அதை வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழந்ததோ, அழுததோ கிடையாது. எனது உணர்வுகள் என்பது மற்றவர்களுக்குக் காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சிமி: இது எப்படி சாத்தியமானது?
ஜெ: எனக்கு மனஉறுதியும்  சுயகட்டுப்பாடும் அதிகம்.
சிமி: அரசியல் உங்களை வலிமை மிகுந்தவராக மாற்றி உள்ளதா?
ஜெ: நிச்சயமாக! இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமும், வெளியாட்களை சந்திக்க விரும்பாத குணமும் எனக்கு உண்டு. பிறரால்  கவனிக்கப்படுவதை முழுமையாக வெறுத்த பெண் நான்.
சிமி: உண்மையாகவா? ஆச்சர்யமாக இருக்கிறது!
ஜெ: ஆச்சர்யமாகத்தான் இருக்கும். உண்மையாகவே பிறரது கவனத்துக்கு ஆளாவதை நான் விரும்பியதே இல்லை. ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதிவசத்தால்தான். உண்மையைச் சொல்லப்போனால் என்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல், பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து செயல்படவே நான் விரும்பினேன்.
சிமி: உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் இளவயது வாழ்க்கைக்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்களா ?
ஜெ: நிச்சயமாக கிடையாது. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான்,  மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டேன்.
சிமி: நீங்கள் ஆறு முதல் பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள். அம்மாவை பிரிந்திருந்த அந்த காலகட்டம் சிரமமாக இருந்ததா?
ஜெயலலிதா - தாயார் சந்தியா
ஜெயலலிதா – தாயார் சந்தியா

ஜெ: ஆம். மிகவும் சிரமமாக இருந்தது. சகித்துக்கொள்ள முடியாத காலகட்டமாகவே அதை நினைக்கிறேன்.
சிமி: அம்மா, உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவாரா?
ஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது.  அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும். அப்போது என்னைப் பார்க்க அம்மா பெங்களூரு வருவார். அவர் சென்னை திரும்புவதை நான் விரும்பியதே இல்லை. அந்த நேரத்தில்   நான்  தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்.
ஆனால், அம்மா சென்னைக்குக்  கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டே  தூங்குவேன்.
காலையில் வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவைத்துவிட்டு அம்மா கிளம்புவாராம்.
நான் காலையில் எழுந்து அம்மாவைக் காணாமல் அழுது தீர்ப்பேன்.  மூன்று நாட்கள் வரையில்கூட அழுதிருக்கிறேன். யாரும் சமாதானப்படுத்த முடியாது.
பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக  ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.
சிமி: ஜெயாஜி, சிறு வயது நிகழ்வுகள் து நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது. ஆனால்  உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை,  நமது வாழ்க்கையில் ஏற்படுத்தவே செய்கிறதுதானே?
ஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது,  மிகக் குறைவான காலங்களையே என் அம்மாவுடன்  கழித்திருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. யோசித்துப் பார்த்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து  நான் அனுபவிக்கவே இல்லைதான். நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அம்மாவுடன்  வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பிஸியாக இருந்தார். காலையில் நான் எழுந்திருப்பதற்கு முன்பே, அவர் படப்பிடிப்பிற்கு கிளம்பிப்போயிருப்பார்.
பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில் நள்ளிரவு வரை விழித்திருந்திருக்கறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவுகள் அவை.
(தொடர்ச்சி நாளை)
வீடியோ இணைப்புகள்:
https://www.youtube.com/watch?v=DzqLo_1SPZg
https://www.youtube.com/watch?v=Cf2bU9xD-3E
 

More articles

Latest article