சென்னை

வின் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக 80000 பால் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமான ஆவின் நிர்வாகம் தொடர்ந்து பல சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   பணி அளிப்பதில் முறைகேடு, விளம்பர செலவுகளில் ஊழல் என அடுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அவ்வகையில் 80000 பால் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்த பால் அட்டைகள் மூலம் பயனர்களுக்குக் குறைந்த விலையில் பால் வழங்கப்பட்டு வந்தன.   ரத்து செய்யப்பட்ட அட்டைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களால் புதுப்பிக்கப்படாத அட்டைகள் ஆகும்.  இவற்றைப் பால் வினியோகஸ்தர்கள் அவர்களாகவே புதுப்பித்து முறைகேடு செய்துள்ளனர்.

முகவர்களுக்கு அதிக அளவில் பால் வழங்க ஆவின் நிர்வாகம் முதலில் மறுத்து வந்தது.  எனவே பால் அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே பால் வழங்கப்பட்டு வந்தது.  வீடு மாறுவோர்  மற்றும் மரணமடைந்தோரின் அட்டைகள் ரத்து செய்யப்படாமல் முகவர்கள் அதைப் புதுப்பித்து அந்த பாலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆவின் பால் விற்பனை ஊழியர்கள் இது குறித்த தகவல்களை நிர்வாகத்துக்கு வெளியிடாமல் முகவர்களுக்கு உதவி வந்ததும் தெரிய வந்துள்ளது.  இதையொட்டி ஆவின் நிர்வாகம் அனைத்து அட்டைதாரர்களையும் தங்கள் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவித்தது.  இதன் மூலம் 80000 போலி அட்டைகள் இருப்பது தெரிய வந்து அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.