ஜெய்ப்பூர்

ஆம் ஆத்மி கட்சி ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

வரும் நவம்பர் 25 ஆம் தேதி அன்று 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இந்த தேர்தலுக்கான, 23 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில், கங்காநகர் தொகுதியில் டாக்டர் ஹரிஷ் ரஹேஜா நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2018 தேர்தலில் காங்கிரசால் டிக்கெட் மறுக்கப்பட்டதால் சுயேட்சையாகப் போட்டியிட்ட பாஜகவின் ஜெய்தீப் பிஹானிக்கு எதிராக ரஹேஜா போட்டியிட உள்ளார்.

மேலும் தன்னா ராம் மேக்வால் ராய்சிங்நகர் (எஸ்சி) தொகுதியிலும், மஹந்த் ரூப்நாத் பத்ரா சட்டமன்றத் தொகுதியிலும், ராஜேந்திர மாவர் பிலானிக்கும் (எஸ்சி), விஜேந்திர தோடசரா நவல்கர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் மற்றும் பாஜக வெளியிட்டிருந்தன.  இதுவரை காங்கிரஸ் 95 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்