சென்னை: அறுபடை முருகனுக்கு பிடித்தமான ஆடிக் கிருத்திகை நாளன்று திருத்தணி முருகன் கோவிலில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடனான ஊரடங்கு ஆகஸ்டு 9ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் கூடுவதை தடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில்  ஆடிக்கிருத்திகை பெருவிழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு தடை விதித்து  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்றின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடி கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 31.7.2021 முதல் 4.8.2021 வரை ஐந்து நாட்களுக்கு மேற்படி திருக்கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோயில் வளாகத்தில் தெப்ப உற்சவம் தொடர்பான நிகழ்வுகள் பக்தர்கள் இன்றி கடந்த ஆண்டு நடைபெற்றது போல் இந்த ஆண்டும் நடைபெறும். எனவே பொதுமக்கள் யாரும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2.8.2021 முதல் 4.8.2021 வரை திருக்கோவில் மலைக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ நிகழ்வுகளை இணையதளத்திலும் யூ டியுப் சேனலிலும் நேரடியாக மாலை 5 மணி அளவில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.