சென்னை: தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை  கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக சலசலப்புகள் எழுந்துள்ளது. சசிகலாவும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். பல அதிமுக நிர்வாகிகளிடம் பேசி, தனது ஆதரவாளராக மாற்றி வருகிறார். அதுபோன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.  அந்த வகையில் தற்போது மேலும் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செய்யப்பட்ட காரணத்தால் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அதன்படி, முன்னாள் எம்பி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கு.பரசுராமன், எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் கோ.ராஜ்மோகன், தஞ்சை நகர கழக செயலாளர் வி.பண்டரிநாதன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர்எம் பாஸ்கர், ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அருள் சகாயகுமார் ஆகிய 5 பேர் இன்று முதல் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.